இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த மே 17 இயக்க நிர்வாகி சிவா திலீபனின் தியாகமும், அவரது கடைசி சமூக வலைதளப் பதிவும் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் 11-ஆம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்குள்ள பெயர்ப்பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த உணர்ச்சிமிகு போராட்டத்தின் ஒரு பகுதியாக, “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என முழக்கமிட்டபடி சிவா திலீபன் திடீரென அங்கிருந்த ரயில் முன் பாய்ந்தார். இதில் தலை மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், கடந்த ஆறு நாட்களாக மரணத்துடன் போராடி வந்த நிலையில், புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவா திலீபனின் மறைவு தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த கடைசி வரிகள் தற்போது வைரலாகி வருகின்றன. அந்தப் பதிவில், “தமிழ் வாழ்க!.. இந்தி ஒழிக!… உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு!” என்று அவர் குறிப்பிட்டிருந்தது, மொழிக்காக அவர் கொண்டிருந்த அதீதப் பற்றையும் தியாக உணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு, அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மொழிப்போரில் நாம் இழந்த உயிர்களே போதும் என்றும், இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்றும் உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் இருக்கும் போது உயிர்த்தியாகம் வேண்டாம் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
