சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்த ரஷ்மி தேசாய், தனது வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரச் சரிவு குறித்துப் பகிர்ந்துள்ளார். ‘சிந்து பைரவி’ உள்ளிட்ட தொடர்கள் மூலம் புகழின் உச்சியில் இருந்தபோதே, சுமார் 3.5 கோடி ரூபாய் வரை கடன் சுமை அதிகரித்ததால் அவர் வாங்கிய சொகுசு வீட்டை அதிகாரிகள் ஜப்தி செய்தனர். உறவினர்களின் ஆதரவின்றி, கையில் போதிய பணமும் இல்லாமல் தவித்த அவர், சுமார் நான்கு நாட்கள் சாலையோரத்திலேயே தங்கி வாழ்ந்த அந்தத் துயரமான நாட்களை நினைவுகூர்ந்து உருக்கமான தகவல்களைத் வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து மற்றும் கடன் எனப் பல சோதனைகளை ஒரே நேரத்தில் எதிர்கொண்டாலும், ரஷ்மி தனது விடாமுயற்சியால் மீண்டும் திரையுலகில் தடம் பதித்தார். கடின உழைப்பால் அனைத்துக் கடன்களையும் அடைத்த அவர், தற்போது 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுக்கு அதிபதியாக உயர்ந்து, சொகுசு கார்களுடன் மீண்டும் ஒரு பிரம்மாண்ட வீட்டில் வசித்து வருகிறார். கீழே விழுந்தாலும் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் மீண்டும் சிகரத்தைத் தொட முடியும் என்பதற்கு இவரது வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
