இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, இந்த முறை வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் (Booth Slip) வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் வாக்காளர்கள் தங்களின் வரிசை எண்ணை எளிதில் கண்டறியும் வகையில் புகைப்படத்துடன் கூடிய சீட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்குப் பதிலாக வாக்காளர் பெயர், பாகம் எண் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்கள் மட்டுமே அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்தத் தகவல் சீட்டு வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சாவடியைக் கண்டறிய மட்டுமே உதவும் என்பதால், இதனைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த அடையாள ஆவணமாகக் கருத முடியாது; எனவே, வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) அல்லது தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 12 இதர அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
