புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே, திருமண வரன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காளியம்மாள் என்ற பெண் நள்ளிரவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். காளியம்மாளின் கணவர் சுரேஷின் இரண்டாவது மனைவி விஜயலெட்சுமி, தனது தம்பி விவினுக்கு காளியம்மாளின் மகளைத் திருமணம் செய்து வைக்கக் கேட்டு வந்துள்ளார். இதற்கு காளியம்மாள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் குடும்பத்தில் மோதல் வெடித்தது. இந்த நிலையில், ஆத்திரமடைந்த விவின் தனது நண்பர்களுடன் அதிகாலையில் காளியம்மாள் வீட்டிற்குச் சென்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த வடகாடு காவல்துறையினர், காளியம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வந்த போலீசார், பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே விவின் உள்ளிட்ட நான்கு பேரையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். நள்ளிரவில் வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட விபரீதம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
