2026 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விலகியதால் பின்னடைவைச் சந்தித்திருந்த கேகேஆர் அணிக்கு, இது மேலும் ஒரு சவாலாக அமைந்துள்ளது.
இதையெடுத்து ராணாவிற்குப் பதிலாக தகுதியான மாற்று வீரரைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட டிரையல்ஸில், சுமார் 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய சிமர்ஜீத் சிங் அணி நிர்வாகத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்ட சிமர்ஜீத் சிங்கை, கேகேஆர் அணியின் ஆலோசகர் பிராவோ பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ரஞ்சி டிராபி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 6 பந்துவீச்சாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், சிமர்ஜீத் சிங்கின் வேகம் மற்றும் துல்லியம் கேகேஆர் அதிகாரிகளுக்குத் திருப்தி அளித்துள்ளது. இதன் மூலம், ஹர்சித் ராணாவிற்குப் பதிலாக சிமர்ஜீத் சிங் அதிகாரப்பூர்வமாக அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
