குஜராத் மாநிலம் ஜெட்பூரில் உள்ள மேம்பாலம் ஒன்றில் அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி இரண்டாகப் பிளந்ததில், காரை ஓட்டிய அவத் திவாரி மற்றும் அவரது நண்பர் தேவ்ராஜ் கோசாய் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சுமார் 120 கி.மீ வேகத்தில் காரை இயக்கிய அவத் திவாரி, விபத்துக்குச் சற்று நேரத்திற்கு முன்பு வரை ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் காட்டிய இந்த அதீத வேகம், இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.
இந்த கோர விபத்தில் அக்ஷய் பிரவீன்பாய் வகேலா என்ற மற்றொரு நண்பர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாமல், கவனச்சிதறலுடன் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
