பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ‘சமிருத்தி யாத்திரை’ (Samriddhi Yatra)-ன் மூன்றாம் கட்டமாக இன்று (மார்ச் 14, 2026) பெகுசராய் பகுதிக்கு வருகை தரவிருந்தார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் தளம் (Helipad) தயார் செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், முதலமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தறிகெட்டு ஓடிவந்த ஒரு மாடு திடீரென ஹெலிபேட் பகுதிக்குள் நுழைந்தது.
बिहार –
बेगूसराय में जहां CM नीतीश कुमार का हेलीकॉप्टर थोड़ी देर बाद उतरने वाला है, वहां बैल घुस आया। पुलिसकर्मियों ने भागकर जान बचाई। pic.twitter.com/EDQ3qicxKp— Sachin Gupta (@SachinGuptaUP) March 14, 2026
மூங்கில் தடுப்புகளை மீறி உள்ளே புகுந்த அந்த மாடு, அங்கிருந்த அதிகாரிகளையும் போலீசாரையும் துரத்தத் தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த மாட்டினை அங்கிருந்து விரட்ட முயன்றனர். ஆனால், அது போலீஸ்காரர் ஒருவரை ஆக்ரோஷமாகத் துரத்தியதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒருகட்டத்தில் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, லத்தி மற்றும் தடிகளுடன் திரண்ட போலீசார் அந்த மாட்டினை பாதுகாப்பான தூரத்திற்கு விரட்டினர்.
முதலமைச்சர் வருவதற்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் மாடு புகுந்தது, அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முதலமைச்சரின் வருகைக்காகச் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகளை இது வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
