“ஈரான் மீது அமெரிக்காவின் இறுதித் தாக்குதல்”…. வளைகுடாவை நோக்கி நகரும் ‘மினி ராணுவ முகாம்’… பதற்றத்தின் உச்சத்தில் உலக நாடுகள்….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது தரைவழிப் போருக்கான ஆயத்தங்களை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக அதிநவீன போர் கப்பலான ‘USS திரிப்போலி’ வளைகுடா பகுதியை நோக்கி நகர்வதை, சீனாவின் செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நகர்வு, அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதையே காட்டுகிறது.

‘USS திரிப்போலி’ என்பது வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, அது கடலிலிருந்து நிலப்பரப்புக்குள் நேரடியாகத் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ‘மினி ராணுவ முகாம்’ ஆகும். இதில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 1000 முதல் 2000 வரையிலான அதிரடிப்படை வீரர்கள் உள்ளனர். இந்த கப்பல் கரைக்கு மிக அருகில் வந்து, பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், வீரர்களையும் நிலப்பரப்பிற்குள் இறக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் கடல், தரை மற்றும் வான் என மும்முனைத் தாக்குதலை அமெரிக்கா தொடுக்கத் திட்டமிட்டுள்ளது.

   

வழக்கமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த அதிரடிப்படைப் பிரிவினர், தற்போது வளைகுடா பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பது போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களில், ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போர் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஈரான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு மற்றும் பதில் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வரும் சூழலில், போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவரவே அமெரிக்கா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

   

ஏற்கெனவே ஈரானின் கடல் பகுதியில் ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போன்ற முக்கிய போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘USS திரிப்போலி’யின் வருகை பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா மிகக் குறுகிய காலத்தில் போரை முடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழல் மத்திய கிழக்கில் பெரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.