தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பெரும் இழுபறியாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் 50 இடங்களைக் கோரிய பாஜக, தற்போது 41 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 இடங்களுக்கு மேல் வழங்க முடியாது என்று கறாராகத் தெரிவித்துவிட்டார். குறிப்பாகக் கோவை போன்ற அதிமுகவின் கோட்டை மற்றும் தென் மாவட்டத் தொகுதிகளை பாஜக குறிவைப்பது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் காரணமாகப் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் எந்த முடிவும் எட்டப்படாததால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இந்தச் சிக்கலால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தங்கள் முடிவை அறிவிக்க முடியாமல் தவிக்கின்றன. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
