அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் ‘சோ ஹியோன்’ என்ற அதிநவீன போர்க்கப்பலில் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டார். மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட குரூஸ் ஏவுகணைகள், கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தன.
மேலும் தனது மகளுடன் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து இந்தச் சோதனையை ஆய்வு செய்த கிம் ஜாங் அன், எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கத் தங்கள் கடற்படை எப்போதும் தயாராக இருப்பதை இந்தச் சோதனை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து தனது மகளை இது போன்ற முக்கிய ராணுவ நிகழ்வுகளுக்கு கிம் ஜாங் அன் அழைத்து வருவதால், கிம் ஜூ ஏ தான் வடகொரியாவின் அடுத்த வாரிசாக உருவெடுப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையைத் தொடர்ந்து கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள இந்த நிகழ்வு, வடகொரியாவின் அதிகாரப் பகிர்வு மற்றும் ராணுவ பலத்தைக் காட்டும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
