பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் தற்போதைய எம்எல்ஏ அப்துல் வஹாப்பிற்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பவுல்ராஜ் கையாண்டு வரும் வியூகங்கள், நெல்லை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 1977 முதல் திமுகவின் கோட்டையாகத் திகழும் பாளையங்கோட்டையில், மீண்டும் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்துள்ள அப்துல் வஹாப்பிற்கு அமைச்சர் கே.என்.நேருவின் முழு ஆதரவு இருந்தாலும், உள்ளூர் அளவில் பவுல்ராஜின் செயல்பாடுகள் கடும் சவாலாக உருவெடுத்துள்ளன. முன்னாள் மேயர் சரவணனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி கட்சியை விட்டு நீக்கப்பட்ட பவுல்ராஜ், தற்போது மன்னிப்பு கடிதம் தர மறுத்துவிட்டு, “கட்சி சின்னத்தை விட வேட்பாளரின் ஆளுமைக்கே முன்னுரிமை” என்ற முழக்கத்துடன் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருவது திமுகவினரிடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
மேலும், பவுல்ராஜ் சுயேட்சையாகப் போட்டியிடுவதோடு, தவெகவுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அப்துல் வஹாப்பிற்குப் பெரும் தலைவலியைத் தந்துள்ளன. கட்சிக்குள்ளேயே நிலவும் இந்த உட்கட்சிப் பூசலால், பாரம்பரியத் தொகுதியான பாளையங்கோட்டையில் வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் திமுகவினர் மத்தியில் வலுத்துள்ளது. இது போதாதென்று, அமைச்சரின் ஆதரவு வட்டத்தில் இருப்பதால், அவர் மீதான அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளின் அதிர்வுகள் அப்துல் வஹாப்பையும் தொற்றிக்கொண்டுள்ளன.
குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் துறை தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்குகளில் அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி, அரசு அதிகாரிகளிடம் அப்துல் வஹாப் வசூல் செய்ததாகக் கூறப்படும் ஆதாரங்கள் தற்போது பாளையங்கோட்டை வட்டாரத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன. ஒருபுறம் சீட் கிடைப்பதற்கே பவுல்ராஜ் போன்றவர்களின் கடும் நெருக்கடிகள், மறுபுறம் அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல் என அப்துல் வஹாப் தற்போதைய அரசியல் சூழலில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கட்சியினர் சமாதானம் கூறினாலும், வரும் தேர்தல் களம் அப்துல் வஹாப்பிற்கு மிகக்கடினமான ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
