உலக வல்லரசாகவும், பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் முக்கிய சக்தியாகவும் விளங்கும் அமெரிக்கா, சர்வதேச விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு செய்து வருகிறது. டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, பல நாடுகளின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்களை நடத்துவதுமாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசியல் பஞ்சாயத்துகளைச் செய்யும் அதேவேளையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடிச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இத்தகைய சூழலில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அதிகாரிகள் செய்துள்ள ஒரு விசித்திரமான செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும், பாதுகாப்புத் துறை செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த இறால்களை அந்த அதிகாரிகள் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். ஒரு பக்கம் உலக நாடுகள் மீது கடுமையான போர்க் கொள்கைகளை வகுத்துவிட்டு, மறுபக்கம் பொதுமக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு ஆடம்பரமான செலவுகளைச் செய்திருப்பது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
