“டி20 உலகக்கோப்பை வெற்றி”…. திருவண்ணாமலையில் வருண் சக்ரவர்த்தி & வாஷிங்டன் சுந்தர்”… அவர்கள் செய்த ‘அந்த’ காரியம்… நெகிழ்ச்சியடைந்த மக்கள்…!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டனர். உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை திருத்தலம் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய பூமியாகவும் போற்றப்படுகிறது. இங்குள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் வருண் சக்ரவர்த்தியும் வாஷிங்டன் சுந்தரும் கிரிவலம் வந்தனர். முன்னதாக, கோவிலில் உள்ள சம்பந்த விநாயகரை வணங்கிய அவர்கள், பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

   

கோவில் நிர்வாகம் சார்பில் இந்த வீரர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. வைகுந்த வாயில் வழியாக தீப மலையை தரிசித்த இவர்கள், மிக எளிமையான முறையில் பொதுமக்களுடன் இணைந்து ஆன்மீக கடமைகளை நிறைவேற்றினர். இவர்களது எளிமையும் பக்தியும் அங்கிருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.

   

மைதானத்தில் அதிரடி காட்டும் கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்த்த உற்சாகத்தில், அங்கிருந்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்து மகிழ்ந்தனர். டி20 உலகக் கோப்பை வெற்றியின் மகிழ்ச்சியை இறைவனோடு பகிர்ந்து கொள்ள வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்த இளம் வீரர்களின் வருகை, திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.