மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் அரிய வகை ஓர்பிஷ் (Oarfish) எனப்படும் ‘டூம்ஸ்டே மீன்கள்’ கண்டறியப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக 3,000 அடி ஆழத்தில் வாழக்கூடிய இந்த மீன்கள், அரிதாகவே மேற்பரப்பிற்கு வரும். இவை கடற்கரைக்கு வரும்போது இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால், இச்சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த மீன்களின் வீடியோ காட்சிகளில், அவை ரிப்பன் போன்ற தோற்றத்தில் மின்னுவதைக் காண முடிந்தது. கடற்கரையில் உலா வந்த மோனிகா பிட்டிங்கர் என்ற பெண், தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மீன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவற்றை மீண்டும் கடலுக்குள் விட முயற்சித்தார். 30 அடி வரை வளரக்கூடிய இந்த விசித்திரமான மீன்களைக் கண்டு அங்கிருந்தவர்கள் அச்சத்தினால் உதவிக்கு முன்வரத் தயங்கினர்.
தற்போது மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், உலக நாடுகள் பெரும் கவலையில் உள்ளன. இந்தச் சூழலில் டூம்ஸ்டே மீன்கள் கண்டறியப்பட்டிருப்பது, மத்திய கிழக்கு மோதல் மூன்றாம் உலகப் போராக உருவெடுக்குமோ என்ற அச்சத்தையும் விவாதங்களையும் சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், ஓர்பிஷ் மீன்கள் தோன்றுவதற்கும் இயற்கை பேரிடர்களுக்கும் இடையே உறுதியான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், இந்த மீன்களை ஒரு அபசகுனமாகப் பார்க்கும் ஒரு தரப்பினரும், இதை ஒரு இயற்கை நிகழ்வாகக் கருதும் மறுதரப்பினரும் உள்ளனர். எது எப்படியிருப்பினும், உலக அளவில் நிலவும் தற்போதைய அரசியல் மற்றும் இயற்கைச் சூழல் மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
