திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் மனு அளிக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த கிரிநாதன் என்பவர், மேல் சட்டை அணியாமல் உள்ளாடை தெரியும் வகையில் வினோதமான முறையில் ஆடை உடுத்தி இருசக்கர வாகனத்தில் கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தியபோது, தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், தனது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த நூதன போராட்டத்தை கையில் எடுத்ததாகவும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த அதிரடி போராட்டத்திற்கான காரணம் குறித்து கிரிநாதன் அளித்த விளக்கத்தில், தான் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததாகவும், கடந்த பிப்ரவரி மாதம் எவ்வித முன்னறிவிப்புமின்றி தன்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கித் தொகையை வழங்காமல் நிர்வாகம் இழுத்தடிப்பதாகவும், நியாயம் கேட்டு பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்காததால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் போலீசார் அவரை அனுமதித்ததை அடுத்து, அவர் தனது புகார் மனுவை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
