41 பேர் பலியான வழக்கு…! சிபிஐ பிடியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… கரூரில் பரபரப்பு…!!

By Devi Ramu on பங்குனி 10, 2026

Spread the love

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகி சிபிஐ எழுப்பும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்கப்போவதாக அவரே தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தேர்தல் பணிகள் காரணமாக விஜய் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குத் திமுகவே காரணம் என்று விஜய் தரப்பு குற்றம் சாட்டியிருந்த நிலையில், செந்தில் பாலாஜி அளிக்கப்போகும் விளக்கம் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.