மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதன் நேரடிப் பாதிப்பால் பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கவும், அந்நியச் செலாவணி கையிருப்பைச் சேமிக்கவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அதிரடியான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதன் முக்கியப் பகுதியாக, அந்நாட்டில் வங்கிகளைத் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி சேமிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மார்ச் 16 முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்துக்கான எரிபொருள் தேவையைக் குறைக்கும் விதமாக, அரசுத் துறை ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய (Work from Home) வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இவை தவிர, அரசுத் துறைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தைக் குறைப்பதாகவும், புதிய வாகனங்கள் மற்றும் குளிரூட்டிகள் (AC) வாங்குவதற்குத் தடை விதிப்பதாகவும் ஷெஹ்பாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய சூழலைப் பயன்படுத்திப் பெட்ரோல் மற்றும் டீசலை அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டும் கள்ளச்சந்தை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
