அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் ஸ்காட் பெசென்ட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உலகளாவிய எண்ணெய் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க அமெரிக்கா தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் வர்த்தக முடிவுகளில் அமெரிக்கா தலையிட்டு, ‘அனுமதி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது இந்திய அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, இந்திய மக்களாகிய நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தைச் சேர்ந்தவர்கள். தொலைதூரக் கரைகளில் இருந்து வரும் உத்தரவுகளை நாங்கள் இனி ஏற்றுக்கொள்வதில்லை. உங்கள் வேலையை மட்டும் நீங்கள் கவனியுங்கள் என்று நேரடியாக டிரம்பைச் சாடியுள்ளார். இந்தியாவின் தன்னாட்சியை வலியுறுத்தும் வகையில் அவரது இந்தப் பதிவு அமைந்துள்ளது.
மேலும், இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர மரியாதை மட்டுமே உலகளாவிய அமைதிக்கு அடித்தளமாக அமையும் என்று கமல் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக ரஷ்யாவை நாடி வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த ‘அனுமதி’ என்ற தொனி இந்தியர்களை அவமதிப்பதாக இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த அதிரடியான அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் பேசிய அவரது துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி உயர்வுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த கமல், இப்போது அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கிற்கு மீண்டும் ஒருமுறை தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
