சென்னையில் மதுபோதையில் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவர் சந்தானத்தை, அம்பிகா என்ற 57 வயது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு, சடலத்தை வெளியே வீசத் துணிச்சல் வராமல், ஐந்து நாட்களாகத் தன் வீட்டிலேயே சடலத்துடன் வசித்து வந்துள்ளார். உடல் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கிய நிலையில், வேறு வழியின்றி நள்ளிரவில் சடலத்தை கோணிப்பையில் கட்டி அண்ணாநகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார்.
இந்தக் கொடூரமான செயலைத் துப்பு துலக்க சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினருக்குப் பெரிதும் உதவியுள்ளன. கால்வாயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட பிறகு, அப்பகுதியின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் நள்ளிரவில் கோணிப்பையை இழுத்துச் சென்று கால்வாயில் வீசும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து மேற்கொண்ட விசாரணையில் அம்பிகா பிடிபட்டுள்ளார். கணவனின் கொடுமையால் பொறுமையிழந்தே இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்ட அம்பிகாவை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
