விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தில், ராஜா செல்வம் என்ற இளைஞர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டையில் லோடுமேனாக பணியாற்றி வந்த இவர், பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார். வழக்கம்போல வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பினர்.
மறுநாள் காலை மாடிக்குச் சென்ற உறவினர்கள், ராஜா செல்வம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சுழி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
