திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதம் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல நவநீதம் தனது கால்நடைகளை மேய்ப்பதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த சுகுமார், நவநீதத்தை தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அந்தச் சமயத்தில் மதுபோதையில் இருந்த சுகுமார், நவநீதத்தை உல்லாசத்திற்கு வருமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். ஆனால், பொது இடத்தில் இதற்கு நவநீதம் உடன்பட மறுத்ததோடு, சுகுமாரின் செய்கையைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சுகுமார், ஆத்திரமடைந்து நவநீதத்தின் கழுத்தை பலமாக நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நவநீதம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி காவல்துறையினர், நவநீதத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற சுகுமாரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது சுகுமாரைக் கைது செய்துள்ள போலீசார், இது குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
