திமுகவில் இணைந்ததற்கு இதுதான் தண்டனையா..? ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொடுத்த திடீர் ஷாக்… சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்பு…!!

By Soundarya on பங்குனி 7, 2026

Spread the love

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று (மார்ச் 06, 2026) ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர். கிழக்கு மாவட்டச் செயலாளர் முறுக்கு கோடை ராமர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், ‘ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் ஒழிக’ என ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் திமுகவில் இணைந்ததை எதிர்த்து, அவரது விசுவாசிகள் இவ்வாறு அதிமுக பக்கம் திரும்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இணைந்த தொண்டர்கள் பேசுகையில், தங்களை வளர்த்துவிட்ட கட்சிக்கு ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினர். முன்னாள் முதலமைச்சராக உயர்ந்த ஓபிஎஸ், கொள்கை முரண்பாடு கொண்ட திமுகவில் இணைந்ததை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஓபிஎஸ்-ன் கோட்டையாகக் கருதப்படும் தேனியிலேயே அவரது ஆதரவாளர்கள் அவருக்கு எதிராகக் கோஷமிட்டு வெளியேறுவது, தென் மாவட்டங்களில் திமுக மற்றும் ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.