இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில், தற்கொலை செய்துகொண்ட 23 வயது இளம்பெண்ணின் சடலத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஹரிணி என்ற அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலையில் அறைக்குள் நுழைந்த ஊழியர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மறுநாள் காலையில் பெண்ணின் உடல் ஆடையின்றி நிர்வாணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரேத பரிசோதனை கூடப் பொறுப்பாளர், இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பாக திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். மக்களின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலேயே சடலத்திற்கு நேர்ந்த இந்த அவமரியாதை சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
