உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் குடிநீர் தொடர்பான சிறு தகராறில் காதலன் தனது காதலியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேலி சிட்டி ரயில் நிலையம் அருகே காச்கஞ்ச் – ராம்நகர் பயணிகள் ரயிலில் பயணம் செய்தபோது, போபாலைச் சேர்ந்த ருக்ஷானா என்பவருக்கும் அவரது காதலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ருக்ஷானா, “நான் ரயிலில் இருந்து குதித்துவிடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற காதலன், அவரே ருக்ஷானாவை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் இருந்து கீழே விழுந்த ருக்ஷானா, தண்டவாளத்தில் சிக்கி உடல் இரண்டு துண்டுகளாகப் பிளந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஜிஆர்பி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில், காதலன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ருக்ஷானா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்பதும், கடந்த சில காலமாக பரேலியில் வாடகை வீட்டில் தங்கி இந்த இளைஞருடன் வசித்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
