கமல் – ஸ்டாலின் நள்ளிரவு டீல்! மநீம வேட்பாளர் பட்டியலில் பாடலாசிரியர் சினேகன்? பரபரக்கும் அறிவாலயம்!

By Muthu Mani on பங்குனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடனான இழுபறி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியுடன் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. மநீம சார்பில் திமுக தலைமையிடம் 6 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், திமுக தலைமை மநீம-விற்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள குறிப்பிட்ட தொகுதிகளைப் பெற்றுவிடுவதில் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார். குறிப்பாகச் சென்னையில் மயிலாப்பூர், ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளும், கோவையில் கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளும் மநீம-வின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இவை தவிர மதுரை மத்தி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளையும் மநீம குறிவைத்து வருகிறது. தங்களுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கையில் இந்த முக்கியத் தொகுதிகள் இடம்பெற வேண்டும் என்பதே கமலின் தற்போதைய வியூகம்.

   

மநீம சார்பில் களம் காணப்போகும் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா மற்றும் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் பலமாக அடிபடுகின்றன. கமல்ஹாசன் ஏற்கனவே திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகிவிட்ட நிலையில், சட்டமன்றத்திலும் தனது கட்சியின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காகச் சில அரசியல் சமரசங்களைச் செய்யவும் அவர் தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது.

   

“சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட்” என்ற தத்துவத்தை முன்னிறுத்தி, தற்போதைய அரசியல் சூழலில் நிலைத்து நிற்பதற்கேற்ப மநீம தனது காய்களை நகர்த்தி வருகிறது. திமுக கூட்டணியில் மற்ற சிறிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது மநீம-விற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. தொகுதிப் பங்கீடு குஞ்சு பொரிக்கும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் அது குறித்த தெளிவான விபரம் வெளியாகும் என்றும் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.