அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2,551 செவிலியர் அலுவலர் (Nursing Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான ‘நார்செட்-10’ (NORCET-10) தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப்-பி பிரிவின் கீழ் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 16, 2026 மாலை 5 மணிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செவிலியர் பிரிவில் பி.எஸ்சி (B.Sc Nursing) அல்லது பி.எஸ்சி (Post Basic) முடித்திருக்க வேண்டும். அல்லது ஜி.என்.எம் (GNM) டிப்ளமோ முடித்து, 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு). தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின்படி (Pay Level 7) ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்ட கணினி வழித் தேர்வுகள் (CBT) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதற்கட்டத் தேர்வு (Prelims) ஏப்ரல் 11, 2026 அன்றும், இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வு (Mains) ஏப்ரல் 30, 2026 அன்றும் நடைபெற உள்ளது. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக 3,000 ரூபாயும், எஸ்சி, எஸ்டி மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 2,400 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.
ஆர்வமுள்ளவர்கள் www.aiimsexams.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கும்போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைச் சரியான அளவில் பதிவேற்றம் செய்வது அவசியம். மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியில் சேர விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
