“அப்படியே ஓடிடுங்க”…. தங்கம் மற்றும் வெள்ளி விலை…. ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக் வார்னிங்….!

By Nanthini on பங்குனி 5, 2026

Spread the love

சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் தங்கம் விலை குறைந்து வருவது முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை குறைவதற்கு முக்கியக் காரணம் சந்தையில் நிலவும் கடும் பணத் தட்டுப்பாடு (Cash Crunch) என்று விளக்கியுள்ளார். சர்வதேச சந்தையை விட இந்தியாவில் தங்கம் விலை குறைவாக இருப்பதற்கு, மக்களிடம் ரொக்கப் பணம் இல்லாததே அடிப்படை என்றும், பணத்தின் தேவை அதிகரித்துள்ளதால் பலர் தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் சந்தையில் தங்கம் இருந்தாலும், அதை வாங்குவதற்கான பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் விலை தற்காலிகமாகச் சரிந்துள்ளதாக அவர் கூறுகிறார். தங்கம் ஒரு கிராம் விலையானது சந்தை அறிவிப்பை விட 300 முதல் 400 ரூபாய் வரை குறைவாகக் கிடைப்பதற்கு இந்த ‘கேஷ் ஃப்ளோ’ (Cash Flow) சிக்கலே காரணம். இதற்கிடையே வெள்ளி விலை வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் வெள்ளியில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கையில் வெள்ளி இருப்பவர்கள் அதை விற்றுவிட்டு வெளியேறுவதே புத்திசாலித்தனம் என்றும் எச்சரித்துள்ளார்.

   

உலக அரசியலைப் பொறுத்தவரை, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் சூழல் தங்கத்தின் வரத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். குறிப்பாக, துபாய் போன்ற பெரிய சந்தைகளில் இருந்து தங்கம் வரும் வழித்தடமான ‘ஹார்முஸ்’ முடக்கப்பட்டால், தங்கத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். அத்தகைய சூழலில், இப்போது சரிந்துள்ள தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரக்கூடும். மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் நமது நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும் என்பதால் பொருளாதார ரீதியாகப் பெரும் சவால்கள் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

   

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 92 ரூபாயைத் தாண்டிச் சரிந்து வருவது கவலையளிப்பதாக ஆனந்த் சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் தற்போது சாதகமாக இல்லை என்பதால், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தற்போதைய தங்கம் விலை சரிவு என்பது ஒரு குறுகிய கால மாற்றமே என்றும், சர்வதேசப் போக்குவரத்து மற்றும் அரசியல் மாற்றங்களால் மீண்டும் தங்கம் விலை உச்சத்தை அடையும் என்றும் அவர் தனது விரிவான விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.