தமிழக அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிவாலயத்திற்கும் டெல்லிக்கும் இடையே தொகுதி எண்ணிக்கை தொடர்பாகப் புகைச்சல் நீடித்து வரும் நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில் உள்ளது. ஒருவேளை காங்கிரஸ் தனது பிடிவாதத்தை விடாவிட்டால், அக்கட்சியை உடைத்துத் தனக்கு ஆதரவான ஒரு பிரிவை உருவாக்க திமுக தலைமை ‘மெகா ஆபரேஷன்’ ஒன்றைத் திட்டமிட்டுள்ளதாக வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சரியாக 1996-ம் ஆண்டு மூப்பனார் அவர்கள் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தமாகா-வைத் தொடங்கியது போன்றதொரு திட்டத்தை திமுக கையிலெடுத்துள்ளதாக ராகுல் காந்திக்கு ரகசியத் தகவல் போயுள்ளதாம். இதன் எதிரொலியாகவே, முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தில் வழக்கமாகப் பயன்படுத்தும் “சகோதரர் ஸ்டாலின்” என்ற வார்த்தையை ராகுல் இந்த முறை தவிர்த்துவிட்டு, மிகவும் மேம்போக்காக வாழ்த்துத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதே முக்கியம் என்ற மனநிலைக்கு ராகுல் வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கட்சி உடைப்பு பயம் காரணமாக ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்குமான உறவில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாகப் பேசப்படுகிறது. “கூட்டணியை விடக் கட்சிதான் முக்கியம்” என ராகுல் நினைக்கத் தொடங்கிவிட்டதால், தமிழக அரசியலில் வரும் நாட்களில் ‘யார் பக்கம் யார்?’ என்ற புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்தச் சூழலால் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது.
