“நீ எப்படிடா என் ஆள அடிக்கலாம்?”… ராயப்பேட்டையில் போதை உச்சத்தில் இளம்பெண் செய்த ரகளை… Noon Party-யில் ஆரம்பித்த வினை….!

By Nanthini on பங்குனி 4, 2026

Spread the love

சென்னை ராயப்பேட்டையில் பட்டப்பகலில் போதை தலைக்கேறிய கல்லூரி மாணவர்கள், இளம்பெண் ஒருவருக்காக நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை ராயப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள தேநீர் கடை ஒன்றில் ஒரு குழுவினர் திடீரென ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டியபடி மோதிக்கொண்டனர். இந்த மோதலில் அவர்களுடன் இருந்த இளம்பெண் ஒருவரும் இறங்கி, “நீ எப்படிடா என் ஆள அடிக்கலாம்?” என்று எதிர் தரப்பினரை நோக்கி ஆபாச வார்த்தைகளால் எகிறியபடி சண்டையிட்டது அங்கிருந்த பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், ராயப்பேட்டை சதயம் திரையரங்கம் பின்புறம் உள்ள ‘LMu’ மதுபான பாரில் நேற்று மதியம் நடைபெற்ற “Noon Party”-யில் இவர்கள் கலந்து கொண்டது தெரியவந்தது. மாலை 4 மணி வரை மது அருந்திவிட்டு போதையில் வெளியே வந்தபோது, அந்தப் பெண்ணின் நண்பர் ஒருவர் விளையாட்டாகவோ அல்லது வம்பு இழுக்கும் நோக்கோடோ பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் காதலனுக்கும், நண்பருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, இறுதியில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு முற்றியுள்ளது.

   

இந்தச் சண்டையை அங்கிருந்த பாரின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இருப்பினும், பொதுமக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சண்டையிட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் குடிபோதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்தது.

   

இந்த விவகாரத்தில் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் முதற்கட்டமாக, மோதலில் ஈடுபட்ட ‘காசி’ என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண் ஒருவர் ஆவேசமாக வாலிபர்களுடன் சண்டையிடும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருவதுடன், கல்லூரி மாணவர்களிடையே பெருகி வரும் மது கலாச்சாரம் குறித்த கவலையையும் சமூக ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.