2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) கூட்டணி அமைத்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கருணாஸ், வரும் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதை முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்ற கருணாஸ், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக திமுகவின் பொதுக்கூட்டங்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வந்த அவர், தற்போது அதிகாரப்பூர்வமாகத் தனது அரசியல் பயணத்தை உதயசூரியன் சின்னத்தின் கீழ் தொடர முடிவு செய்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே தான் களம் காண இருப்பதாகக் கருணாஸ் தெளிவுபடுத்தியுள்ளார். இது திமுக தலைமையிலான கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூக வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எந்தத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் நிறைந்த தென் மாவட்டத் தொகுதி ஒன்றே அவருக்கு ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அண்மைக்காலமாக விமர்சித்து வந்த கருணாஸ், தற்போது திமுக கூட்டணியில் உறுதி செய்யப்பட்டு இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
