மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளிலும் 2026-ஆம் ஆண்டில் சுமார் 46,000 காலிப்பணியிடங்களை நிரப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசப் பணியில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு 17.5 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது முதன்மைத் தகுதியாகும். உடற்தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முறையான ராணுவப் பயிற்சி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்குத் தங்கும் வசதி, பயணச் செலவுகள் மற்றும் சீருடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மத்திய அரசே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதியத்தைப் பொறுத்தவரை, முதல் ஆண்டில் மாதத்திற்கு ரூ. 21,000 சம்பளமாக வழங்கப்படும். இது படிப்படியாக உயர்ந்து நான்காம் ஆண்டில் ரூ. 28,000 ஆக அதிகரிக்கும். நான்கு ஆண்டு காலப் பணி நிறைவடைந்த பிறகு, ஓய்வூதியப் பலனாக ‘சேவா நிதி’ திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 11.71 லட்சம் வழங்கப்படும். மொத்தமாக நான்கு ஆண்டுகளில் ஒரு அக்னிவீரர் சுமார் ரூ. 23.43 லட்சம் வரை ஈட்டக்கூடிய வாய்ப்பு இதில் உள்ளது.
பணி நிறைவுக்குப் பிறகு, அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF), ரயில்வே பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பல்வேறு மாநிலக் காவல் துறைகளில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் இவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் இளைஞர்கள் இந்திய ராணுவம் மற்றும் கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
