தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களைக் கவரப் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூரில் அடுத்தடுத்து அதிரடிப் பரிசுகளை வழங்கி திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் சுமார் 10 லட்சம் ஹாட் பாக்ஸ்கள் மற்றும் சில்வர் தட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் பிரத்யேகமாக வேட்டி, சட்டை, சேலை, பிளாஸ்க் மற்றும் குடை என ஆறு வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட ‘சர்ப்ரைஸ்’ பரிசாக 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம்களை எஸ்.பி. வேலுமணி வழங்கி வருகிறார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த டிரம்கள் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காகத் தினமும் அதிகாலை வேளையிலேயே லாரிகள் மூலம் டிரம்கள் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 25,000 வாக்குகள் கொண்ட இந்தப் பிரிவினரைத் தன் பக்கம் ஈர்ப்பதன் மூலம், தொகுதியில் தனது பிடியை மேலும் வலுவாக்க வேலுமணி திட்டமிட்டுள்ளார்.
மறுபுறம், திமுக தரப்பில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் சிறப்பு நிதியுதவிகள் மூலம் வாக்காளர்களைக் கவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான திமுக குழுவினரும் பதிலுக்குப் பரிசுகளை இறக்கத் திட்டமிட்டு வருவதால், கோவையில் தேர்தல் களம் தற்போதே உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. வேலுமணியின் இந்த அதிரடித் திட்டங்கள் வரவிருக்கும் தேர்தலில் அவருக்குக் கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
