ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றம் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு முகமைகள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நேற்று அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் தீவிர மதப் பேச்சாளர்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்ற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, அத்தகைய நபர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடும் என்பதால், உளவுத்துறைத் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மற்றும் லக்னோ போன்ற பகுதிகளில் காமேனியின் மறைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தூதரகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது
