கொடூரத்தின் உச்சம்… 6 வயது மகனைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி…. பின்னணியில் இருந்த பகீர் காரணம்…!

By Nanthini on மாசி 28, 2026

Spread the love

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 6 வயது மகனைக் கொலை செய்துவிட்டுத் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் கணபதி நகரைச் சேர்ந்த சரண்யா (30) என்பவருக்கும், சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரியும் வினோத்குமார் (37) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது மகன் சாய் (6), அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யாவிற்கும் அவரது கணவர் வினோத்குமாருக்கும் இடையே தொலைபேசி வாயிலாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா, ஆத்திரத்திலும் விரக்தியிலும் விபரீத முடிவை எடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு, உறங்கிக் கொண்டிருந்த தன் மகன் சாயின் கழுத்தைச் சுடிதார் துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்துள்ளார்.

   

மகனைக் கொன்ற கையோடு, சரண்யாவும் தனது கை நரம்புகளைக் கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தான் செய்த இந்த பயங்கரச் செயலைத் தனது உறவினர்களுக்குச் செல்போன் மூலம் அவர் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாகப் பட்டீஸ்வரம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுவன் சாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

   

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சரண்யாவை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காகக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தம் மற்றும் குடும்பச் சிக்கல்கள் ஏற்படும்போது இத்தகைய விபரீத முடிவுகளைத் தவிர்த்து, அரசின் 104 போன்ற உதவி எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறுவது இது போன்ற பிஞ்சுயிர்கள் பறிபோவதைத் தடுக்க உதவும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.