2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதே அரசியல் களத்தில் அனலைப் பறக்கவிட்டுள்ளன. கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் தரப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” மற்றும் “கூடுதல் சீட்டுகள்” என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்திருப்பது திமுக தலைமையைத் திக்குமுக்காடச் செய்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
ராஜ்யசபா இடங்களைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பலப்படுத்த காங்கிரஸிற்கு கூடுதல் உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். இதன் காரணமாக, திமுகவிடம் இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இதற்கு திமுக தலைமை மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த முறை வழங்கப்பட்ட 25 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே மீண்டும் ஒதுக்க முடியும் என்பதிலும், சில தொகுதிகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலும் அறிவாலயம் கறாராக இருப்பதாகத் தெரிகிறது.
மிக முக்கியமாக, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் திமுக ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. “தமிழகத்திலிருந்து வடமாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜ்யசபாவிற்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் தரப்பு திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இரண்டு சீட்டுகளுக்குப் பதிலாக ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் திமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழக காங்கிரஸின் சீனியர் தலைவரான பீட்டர் அல்ஃபோன்ஸ் போன்றவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் மகிழ்ச்சி என்று திமுக தலைமை கே.சி. வேணுகோபாலிடம் அழுத்தமாகக் கூறியுள்ளது. இந்த “கறார்” அரசியல் நகர்வு காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
