திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு தனது வீட்டிற்குப் புதிய மின் இணைப்பு கோரி மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கிருந்த மதியழகன் (60) என்ற லைன் இன்ஸ்பெக்டர், மின் இணைப்பு வழங்க 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆயிஷா பேகம், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய நோட்டுகளை மதியழகனிடம் வழங்கியபோது, அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, மின்வாரிய ஊழியர் மதியழகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜூலியட் புஷ்பா அதிரடி உத்தரவிட்டார். அரசுப் பணிகளில் லஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராகத் துணிச்சலாகப் புகார் அளித்தால் உரிய தண்டனை கிடைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளதுடன், மின்வாரிய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
