தமிழக தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தேமுதிக கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இணைந்தது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், இழந்த பலத்தை ஈடுகட்ட எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். குறிப்பாக, பாமகவை கூட்டணியில் இணைக்க அன்புமணி ராமதாஸ் தயக்கம் காட்டினாலும், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு ராமதாஸை வளைக்க அதிமுக தலைமை விருப்பம் காட்டி வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பாமகவின் முக்கியத்துவம் திடீரென அதிகரித்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ராமதாஸுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. எடப்பாடி தரப்பிலிருந்து மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவும் தனது பங்கிற்கு ராமதாஸைத் தக்கவைக்க காய் நகர்த்தி வருகிறது. அடுத்தகட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ராமதாஸ், தனது இறுதி முடிவை நாளைக்குள் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார். பாமகவின் இந்த முடிவு, வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
