“தூக்கில் தொங்கிய மனைவி… மாயமான கணவன்”… ஃபிரிட்ஜ் பின்னால் காத்திருந்த பேரதிர்ச்சி…. ஆந்திராவை உலுக்கிய பகீர் சம்பவம்..!

By Nanthini on மாசி 28, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சந்தேகப் பேயால் கணவனே மனைவியைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு – துர்கா தம்பதியினர் நீண்ட கால திருமண வாழ்க்கையில் ஒரு மகன் இருந்தும், அண்மைக்காலமாக குடும்பத்தில் அமைதி இன்றி தவித்துள்ளனர். துணிக்கடை ஒன்றில் விற்பனைப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த துர்கா, நாகரீகமாக உடை அணிந்து செல்வதை தேவுடு தவறாகச் சித்தரித்து வந்துள்ளார். “வேலைக்குச் செல்லும்போது எதற்கு இவ்வளவு அலங்காரம்?” எனத் தொடங்கி, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தச் சந்தேகம் முற்றிய நிலையில், துர்கா வேலைக்குச் செல்லும் இடத்திற்கே தேவுடு பின்தொடர்ந்து சென்று வேவு பார்த்துள்ளார். இது துர்காவிற்குத் தெரியவரவே, இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. சம்பவத்தன்று இதே விவகாரத்தை முன்வைத்து நடந்த தகராறில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற தேவுடு, துர்காவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், இது தற்கொலை போலத் தெரிய வேண்டும் என்பதற்காக துர்காவின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியுள்ளார்.

   

துர்காவைத் தேடி வந்த தோழி ஒருவர் கதவைத் தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்து துர்காவின் பெற்றோரை அழைத்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, துர்கா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையிலேயே, துர்காவின் மரணம் தற்கொலை அல்ல, அது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதியானது. இதனால் தேவுடு மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

   

வீட்டிலேயே தேவுடுவின் செல்போன் மற்றும் பைக் இருந்ததால் அவர் எங்கோ மறைந்திருப்பதை உணர்ந்த போலீசார், வீடு முழுவதும் தீவிரத் தேடுதல் நடத்தினர். அப்போது சமையலறையில் இருந்த ஃபிரிட்ஜிற்குப் பின்னால் பதுங்கியிருந்த தேவுடுவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தாமே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சந்தேகத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.