பழைய கதையெல்லாம் மறந்திருச்சா..? ஜெ., உயிரோடு இருந்தப்போ EPS இரக்கப்பட்டு செஞ்ச காரியம்… செங்கோட்டையனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அப்சரா ரெட்டி…!!

By Soundarya on மாசி 28, 2026

Spread the love

அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுகவில் அனைத்துப் பதவிகளையும் அனுபவித்தவர் செங்கோட்டையன் என்றும், அவரது கடந்த கால வரலாறு அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் சாடினார். குறிப்பாக, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது செங்கோட்டையனின் மனைவி அளித்த புகாரின் பேரில் அவர் ஓரங்கட்டப்பட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமி இரக்கப்பட்டு அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதாகவும் அப்சரா ரெட்டி சுட்டிக்காட்டினார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளதை விமர்சித்த அவர், அங்கு சென்று விஜய்யை ‘இளைய தளபதி’, ‘வெற்றி தளபதி’ என அவர் புகழ்ந்து கூவிக் கொண்டிருப்பதாகக் கூறினார். இதுவே செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கையில் கடைசி அத்தியாயமாக இருக்கும் என்றும், கொள்கை பிடிப்பின்றி அவர் செயல்படுவதாகவும் அப்சரா ரெட்டி தனது உரையில் வழக்கமான அரசியல் விமர்சனமாக முன்வைத்துள்ளார்.

   

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையையும் கிண்டல் செய்த அப்சரா ரெட்டி, விஜய் ஒரு “வொர்க் ஃபிரம் ஹோம்” (Work From Home) அரசியல்வாதி என்று விமர்சித்தார். விஜய் எப்போதும் சொகுசு கார் மற்றும் தனி விமானங்களில் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்றும், அவர் மக்களை நேரடியாகச் சந்திப்பதில்லை என்றும் கூறினார். விஜய் தனது வீட்டில் இருந்தே அரசியல் செய்வதாகவும், தவெக கட்சி நிர்வாகிகள் யாராவது மக்களை நேரில் சந்திக்கிறார்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.