கோவையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, அக்கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் மற்றும் ராமசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் முறைப்படி அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த இளைஞர்கள் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமை மற்றும் அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் தங்களை ஈர்த்ததாகத் தெரிவித்தனர். குறிப்பாக, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதிமுகவின் அணுகுமுறை தங்களுக்குப் பிடித்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்து புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.
தற்போது 20 பேர் இணைந்துள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்றும், வரும் நாட்களில் தவெக-வைச் சேர்ந்த மேலும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், விரைவில் அவர்கள் பெரிய அளவில் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கோவையில் அக்கட்சியின் இளைஞர்கள் விலகி பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இணைவது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், கோவை மாவட்டத்தில் இளைஞர்களிடையே தங்களுக்கு இருக்கும் ஆதரவை இந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
