திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஒரு குடும்பமே கொலை மிரட்டலுக்கு உள்ளாகி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இந்துமதி என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாகத் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மகேந்திரனின் மனைவி நந்தினிக்குத் தெரியவந்ததையடுத்து, குடும்பத்தில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.
ஆரம்பத்தில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகேந்திரன் தனது தவறுகளை உணர்ந்து இந்துமதியுடனான தொடர்பைக் துண்டித்துவிட்டுத் தனது மனைவியுடன் வாழ முடிவு செய்துள்ளார். இருப்பினும், இந்துமதி விடாமல் மகேந்திரனைத் தொடர்புகொண்டு தன்னுடன் வருமாறு வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனைத் தட்டிக்கேட்கச் சென்ற நந்தினியை, இந்துமதியும் அவரது உறவினர்களும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதுடன், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் இத்துடன் நின்றுவிடாமல், மகேந்திரனின் பள்ளி செல்லும் சிறுமி என்றும் பாராமல், இந்துமதியின் தரப்பினர் வாகனத்தை மோதவிடுவது போன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்துமதியின் உறவினர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றுவதால், “எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வருவதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தங்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து நேரலாம் என்ற அச்சத்தில், மகேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார். அங்கு கண்ணீர் மல்கத் தங்கள் நிலையை விவரித்த அவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கள்ளக்காதல் மோகத்தால் ஒரு குடும்பமே வீதிக்கு வந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
