தமிழக அரசியலில் அதிமுக மற்றும் தவெக இடையேயான வார்த்தைப் போர் தற்பொழுது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. “தவெக-வுக்குச் சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வரத் தயாராக உள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அண்மையில் தெரிவித்திருந்தார். கட்சியின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அவர் இவ்வாறு கூறியிருந்த நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சேங்கொட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் பேசிய சேங்கொட்டையன் , “எந்தக் கட்சியாக இருந்தாலும் வரவிருக்கும் தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்கட்டும்; அப்போது எத்தனை பேர் தவெக-வை நோக்கி வருகிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள்” என சவால் விடுத்தார். மேலும், தான் அதிமுகவில் இருந்தபோது தனக்கு என்ன மாதிரியான மரியாதை கிடைத்தது என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், அங்கிருந்து வெளியேறியதற்கான காரணத்தைச் சூசகமாக வெளிப்படுத்தினார். தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் தவெக-வின் பக்கம் திரும்புவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
