தமிழக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ரேடியோ அல்லது டேப் ரெக்கார்டர்களைப் பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. பேருந்து பயணத்தின்போது அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்படுவதால் தங்களுக்கு மிகுந்த அசவுகரியம் ஏற்படுவதாகவும், கவனச்சிதறல் உண்டாவதாகவும் பயணிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் ‘ பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பயணிகளின் அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு இந்த உத்தரவு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுப் பேருந்துகளில் எக்காரணம் கொண்டும் ரேடியோக்களோ அல்லது ஒலிப்பதிவு செய்யும் கருவிகளோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும், இந்த விதிகளை மீறிச் செயல்படும் பணியாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது பேருந்து பயணத்தை அதிக சத்தம் இல்லாத சூழலாக மாற்றுவதுடன், ஓட்டுநர்கள் கவனச்சிதறல் இன்றி வாகனத்தை இயக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
