“850 கிராம் தங்கம், வைர நகைகளுடன் எஸ்கேப்”…. அந்தரங்க வீடியோவால் தொழிலதிபர் மனைவிக்கு நேர்ந்த கதி… சென்னையில் ஒரு திகில் சம்பவம்….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம், அதே குடியிருப்பில் குடியேறிய வாலிபர் ஒருவர் நெருங்கிப் பழகி, சுமார் 850 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு அங்கு குடியேறிய சங்கீதா மற்றும் அவரது மகன் திலீப் ஆகியோருடன் அந்தப் பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்ட திலீப், அந்தப் பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, காலப்போக்கில் தனது பணத்தேவைக்காக அவரிடமிருந்து சிறுகச் சிறுக நகை மற்றும் பணத்தைப் பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 850 கிராம் தங்கம், 120 கிராம் வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்ட திலீப், அவற்றை திருப்பித் தர மறுத்ததோடு விபரீத செயல்களில் இறங்கியுள்ளார். இருவரும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, அந்தப் பெண்ணை மிரட்டி மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் கணவருக்குத் தெரியவரவே, அவர் திலீப்பிடம் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

   

இதற்கிடையே, தங்களது மோசடி அம்பலமானதை உணர்ந்த திலீப்பும் அவரது தாயாரும், குடியிருப்பிலிருந்து ரகசியமாக வீட்டை காலி செய்துவிட்டுத் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், உள்ளூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். தனது நகைகளை மீட்டுத் தருமாறும், அந்தரங்கப் படங்களைக் காட்டி மிரட்டும் திலீப் மற்றும் அவரது தாய் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது புகாரில் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

   

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திலீப் ஒரு தொடர் குற்றவாளி என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமூக வலைத்தளம் மூலமாக இளம்பெண்களிடம் பழகி, அவர்களுக்கு விமானப் பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கும் அவர் மீது நிலுவையில் உள்ளது. தற்போது தொழிலதிபர் மனைவியை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக உள்ள திலீப் மற்றும் அவரது தாயைத் தேடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.