மத்தியப் பிரதேசத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தார் (Dhar) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் கணிதத் தேர்வை எழுதிக் கொண்டிருந்தார். தேர்வு தொடங்கிச் சிறிது நேரத்திலேயே அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கழிவறைக்குச் சென்ற அந்த மாணவி, அங்கேயே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தேர்வு எழுத வந்த இடத்தில் திடீரென மாணவிக்குத் பிரசவம் நடந்த செய்தி, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவி நீண்ட நேரமாகத் திரும்பாததைக் கண்டு சந்தேகமடைந்த பெண் ஊழியர்கள் கழிவறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு அவர் குழந்தையுடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவியும் அவரது குழந்தையும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனது மகள் கர்ப்பமாக இருந்த விஷயம் தங்களுக்குத் தெரியாது என மாணவியின் பெற்றோர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தேர்வு மையத்தில் நடைபெற்ற இந்த எதிர்பாராத பிரசவம் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
