கோவையில் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை சக ஊழியர் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்த மகேஷ் (32) என்பவர், கோவையின் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் கோவையைச் சேர்ந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளிப் பெண்ணும் அவரது தாயாரும் வேலை பார்த்து வந்துள்ளனர். மகேஷிற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று அந்த இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த மகேஷ், தாகத்திற்கு தண்ணீர் கேட்பது போல நடித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இளம்பெண் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, மகேஷ் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து பலாத்காரம் செய்துள்ளார். அந்தப் பெண் “அண்ணா, என்னை விட்டு விடுங்கள்” என்று கதறியும், அதைப் பொருட்படுத்தாமல் மகேஷ் இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம், பாதிக்கப்பட்ட இளம்பெண் அழுதுகொண்டே நடந்த கொடுமைகளைக் கூறியுள்ளார். “அவன் என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டான்” என்று அந்தப் பெண் கதறியது காண்போரை கண்கலங்கச் செய்தது. இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், உடனடியாக கோயம்புத்தூர் மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவாக இருந்த மகேஷைத் தேடி வந்த காவல்துறையினர், இறுதியில் அவரைப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டிய மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு, தெரிந்த நபராலேயே இத்தகைய கொடுமை இழைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
