முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் தேனி மாவட்டத்தில், அவரது தீவிர ஆதரவாளர்கள் சுமார் 400 பேர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ்-ன் வலதுகரமாகத் திகழ்ந்த ‘செயற்கை’ சந்திரன் தலைமையில் இந்த முக்கிய இணைப்பு நிகழ்ந்துள்ளது. சொந்த ஊரிலேயே தனது செல்வாக்கு சரிவதைக் கண்டு ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அதேபோல், நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மகளிரணி, மாணவரணி மற்றும் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளனர். ஒருபுறம் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், மறுபுறம் மண்டல வாரியாக முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் முகாமை விட்டு வெளியேறுவது அவருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடர் மாற்றங்கள் தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிமுகவின் கரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
