தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உணர்ச்சிகரமாகப் பேசியபோது கண்கலங்கியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்களும் நானும் ரத்தமும் சதையும் போன்றவர்கள், எங்களைப் பிரிக்க முடியாது” என்று அவர் ஆவேசமாகப் பேசிய தருணத்தில் கண்ணீர் விட்டது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், விஜய்யின் இந்த அழுகை கூட முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு ‘ஸ்கிரிப்ட்’ (Script) தான் என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு ஸ்கிரிப்ட் தாள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் விஜய் எப்போது பேச வேண்டும், எங்கே இடைவெளி விட வேண்டும், எந்த இடத்தில் மைக்கை விட்டு விலகிச் சென்று அழ வேண்டும் என்பது வரை மிகத் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, “இந்த வரியைப் பேசி முடித்ததும் சிறிது இடைவெளி விட வேண்டும்; பேச முடியாமல் தவிப்பது போல் காட்டி, மைக்கை விட்டுச் சற்று நகர்ந்து சென்று அழ வேண்டும்; பிறகு மீண்டும் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு உணர்ச்சிகரமாகத் தொடர வேண்டும்” என்று குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
திரைத்துறை பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், விஜய் எப்போதுமே வசனங்களை மனப்பாடம் செய்துதான் பேசுவார் என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே இருந்து வருகிறது. இப்போது வைரலாகியுள்ள இந்த ஸ்கிரிப்ட் பேப்பர் அந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உணர்ச்சிகரமான பேச்சும், கண்ணீரும் கூட திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதத்தை கிளப்பியுள்ளது.
