தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தபோதிலும் அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், இன்று காய்ச்சலின் தீவிரம் அதிகரித்ததால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.
முன்னதாக, திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மற்றொரு முக்கிய அமைச்சரான மா. சுப்பிரமணியனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மா. சுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து கேட்டறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் மருத்துவமனைக்கு நேரில் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர்கள் இருவரும் விரைவில் குணமடைந்து மக்கள் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
