சாணக் குவியலில் ஜொலித்த வெள்ளி…. நகைக்கடை அதிபர் மகனே மாஸ்டர் பிளான்…. ஆம்பூரில் அரங்கேறிய ‘மணி ஹெய்ஸ்ட்’….!

By Nanthini on மாசி 20, 2026

Spread the love

வாணியம்பாடியில் சினிமா பாணியில் அரங்கேறிய சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி நகை கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி தீபக் என்பவர், கடந்த 17-ம் தேதி தனது காரில் விற்பனைக்காக 100 கிலோவிற்கும் அதிகமான வெள்ளிப் பொருட்களை ஏற்றி வந்துள்ளார். வாணியம்பாடி அருகே காரை நிறுத்திவிட்டு அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி காரிலிருந்த சுமார் 38.50 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரியின் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு ஆய்வு செய்ததில், வாணியம்பாடியைச் சேர்ந்த பாபு என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

   

இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டது வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளரின் மகனான நரசிம்மன் அமல்ராஜ் என்பது தெரியவந்தது. இவருடன் இணைந்து பாபு மற்றும் மணி என்பவர்கள் இந்த திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். வியாபாரி எப்போது வருவார், அவரிடம் எவ்வளவு நகைகள் இருக்கும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு இவர்கள் இக்கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

   

காவல்துறையினர் மணியின் வீட்டில் சோதனை நடத்தியபோது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மிகவும் விசித்திரமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 38.50 கிலோ வெள்ளி நகைகளை அவர் தனது வீட்டின் கழிவறை தொட்டி மற்றும் மாட்டுச் சாணக் குவியலுக்குள் புதைத்து வைத்திருந்தார். அவற்றை மீட்ட போலீசார், குற்றவாளிகளைக் கைது செய்தனர். சாணக் குவியலில் இருந்து கோடிக்கணக்கான நகைகள் மீட்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.